வேள்பாரி....!
சில வருடங்களுக்கு முன்னால், இது போன்றதொரு சில வரிக்குறிப்பு எழுதியுள்ளேன். அது கல்கி இயற்றிய பொன்னியின் செல்வன் பற்றியது. அதில் நான் மிகவும் சிலாகித்து எழுதிய சிலவற்றின் மீது எதிர்க்கருத்துக் கொண்ட மனநிலையில் இதை எழுதுகிறேன். இதனை ஏற்கெனவே எழுதிய குறிப்பின் திருத்தம் எனவும் கொள்ளலாம்; இந்த திருத்தமும் கூட திருத்தப் பெறலாம்.
இந்த இரண்டு புத்தகங்களைத் தாண்டி என்னை மனதளவில் பாதித்த புத்தகங்கள் சிலவும் உண்டு. ஆனால், அவற்றைப் பற்றி நான் எங்கும் எழுதியது இல்லை. இதற்கு பின்னரும் எழுதப்போவதில்லை. இது எழுத என் முதற்காரணம், இதற்கு முன்னர் நான் எழுதின பேரரசுகளின் மீதான என் பார்வையை முற்றிலும் வேறொன்றாக்கியது. என் பிழையை நானே திருத்தும் ஒரு முயற்சி.
பேரரசு - பிரம்மாண்டம்
நாம் பிரம்மித்து வியப்புறுவனவற்றை இயல்பாகவே ரசிக்கத் தொடங்குகிறோம். அதன்பால் ஈர்க்கப்பட்ட நாம் அதன் மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. ராஜராஜசோழனின் வாள் இத்தனை பாரமா என வியக்கும் நாம் இதனை கொண்டு எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கும் என்பதை சிந்திக்கத் தவறுகிறோம். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தின் பெருமை பேசும் நாம் அதைக் கட்டுவதில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகள் பற்றி பேசமறுக்கிறோம். காரணம் அடிமைகள் பற்றிய தெளிவான குறிப்பு இல்லை. வரலாற்றில் எந்த அரசனும் தன்னுடைய கருப்புப்பக்கங்களை இருட்டடிப்பு செய்யத் தவறவில்லை. இங்கு காவிரி வடிநில பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த சோழர்களுக்கு கங்கை வரை படை எடுக்க என்ன அவசியம் வந்தது. இதில் இயன்றளவு வளங்களை தன்வயப்படுத்திக் கொள்ளும் சுயநலம் தாண்டிய பிற காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பேரழிவின் உச்ச சாயல் தான் பேரரசுகளின் காலம். எத்தனை எத்தனை குறுங்குடிகள் அழிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டிருக்கும். வரலாற்றின் எந்த பேரரசும் தற்காப்புப் போர் நிகழ்த்தவில்லை. தன் வலிமையை, தன்னை விட வலிமையில் குன்றிய அரசுகளிடம் காட்டி அவற்றைத் தன்னாளுகைக்கு உட்படுத்தும் போர்கள் தாம் பெரும்பாலும். என்னுள் இந்தக் கேள்விகளை பொன்னியின் செல்வன் எழுப்பவில்லை. ஆனால் எழாத இக்கேள்விகளுக்கு வேள்பாரி விடை தந்தது. இனி பேரரசுகளின் பிரம்மாண்டங்கள் என்னை ஈர்க்காது என்றே நினைக்கிறேன்.
அரசியல் திணிப்பு
பொன்னியின் செல்வனில் கதை முழுக்கப் பயணிக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் மீது எப்படி பிராமணிய திணிப்பு என்னும் விமர்சனம் இருக்கிறதோ அதே போல் வேள்பாரி மீதும் பொதுவுடைமை திணிப்பு விமர்சனம் வைக்கப்படலாம். ஒரே வேற்றுமை முதலாவது புனைவு, இரண்டாவது உண்மை. ஆனால் உண்மையில் இரண்டும் கதைக்களத்துடன் ஒன்றியே உள்ளதால், இதனை எதிர்க்கும் மனநிலையில் எனக்கு உடன்பாடு இல்லை.
வேள்பாரி....!
இதுவரை 'முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி' என்று ஒற்றை வரி மூலம் அறியப்பட்ட ஒரு மலைமக்களின் தலைவன், சு. வெங்கடேசனின் இந்த முயற்சியினால் ஆழமாக அறியப்படுவான் என்பதில் ஐயம் இல்லை. அவனை இந்த சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் என் சிறு முயற்சியாகவும் இந்த வாய்ப்பைக் கருதுகிறேன். கபிலரின் பெரும்பான்மையான பாடல்கள் குறிஞ்சித்திணை பற்றியனவாகவே இருக்கக் காரணம் தொடங்கி பாரி - கபிலர் நட்பு வரை விரிவாக அலசப்பட்டுள்ளது இந்த நூலில். பாரியின் மரணம் பற்றி பரவலாக அறியப்படும் செய்திகள் இடம் பெறாதது ஆறுதல். இன்று வரை தொடரும் இயற்கைக்கும் வணிகத்துக்கும் இடையிலான போர் இந்த நூலை தற்காலத்துக்கும் பொருத்திப்பார்க்க அனுமதிக்கிறது. ஒரு மலை மக்கள் தலைவன் மூவேந்தர்களின் கூட்டுப்படையை தோற்கடித்தான் என்னும் செய்தி இந்த நூலுக்கு அடித்தளம் என்றாலும், கபிலரின் 'கபிலம்' நூல் கிடைக்கப் பெற்றிருந்தால் வேள்பாரியின் வரலாறு என்னவாக இருந்திருக்கும் என்பதற்கான விடையே 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்பது ஆசிரியர் கூற்று. ஆசிரியரின் வரிகளுக்கு ம.செ. உருவம் கொடுத்துள்ளார். அவரின் ஓவியங்கள் பறம்பின் மக்களை இன்னும் நமக்கு அணுக்கப்படுத்துகிறது . வாசிக்கும் போது சிரிக்க வைத்த இடங்கள் நிறைய இருப்பினும் அழவைத்து மனதில் நின்ற இடங்களும் உண்டு. காலம் அனுமதித்தால் உங்களின் 50 மணி நேரங்களை இந்த புத்தகத்திற்காக செலவிடுங்கள். நிச்சயம் இது உங்களை விசனப்படுத்தாது..!
நன்றி !
Wow super
ReplyDelete