வேள்பாரி....!
சில வருடங்களுக்கு முன்னால், இது போன்றதொரு சில வரிக்குறிப்பு எழுதியுள்ளேன். அது கல்கி இயற்றிய பொன்னியின் செல்வன் பற்றியது. அதில் நான் மிகவும் சிலாகித்து எழுதிய சிலவற்றின் மீது எதிர்க்கருத்து க் கொண்ட மனநிலையில் இதை எழுதுகிறேன். இதனை ஏற்கெனவே எழுதிய குறிப்பின் திருத்தம் எனவும் கொள்ளலாம்; இந்த திருத்தமும் கூட திருத்தப் பெறலாம். இந்த இரண்டு புத்தகங்களை த் தாண்டி என்னை மனதளவில் பாதித்த புத்தகங்கள் சிலவும் உண்டு. ஆனால், அவற்றைப் பற்றி நான் எங்கும் எழுதியது இல்லை. இதற்கு பின்னரும் எழுதப்போவதில்லை. இது எழுத என் முதற்காரணம், இதற்கு முன்னர் நான் எழுதின பேரரசுகளின் மீதான என் பார்வையை முற்றிலும் வேறொன்றாக்கியது. என் பிழையை நானே திருத்தும் ஒரு முயற்சி. பேரரசு - பிரம்மாண்டம் நாம் பிரம்மித்து வியப்புறுவனவற்றை இயல்பாகவே ரசிக்கத் தொடங்குகிறோம். அதன்பால் ஈர்க்கப்பட்ட நாம் அதன் மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. ராஜராஜசோழனின் வாள் இத்தனை பாரமா என வியக்கும் நாம் இதனை கொண்டு எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கும் ...